Sunday, July 13, 2008

க்ராண்ட் கேன்யன் - என் தம்பியின் பயண அனுபவம்

"எனதருமைச் சகோதரியே!

கணிப்பொறியின் திரைக்குள்ளே
மணிப்பொழுதைக் கரைத்திடும் வாழ்க்கையிலே
சில நாட்கள் கிடைத்ததே பாசம் கொண்டாட
என நினைத்து உனதில்லம்தேடி வந்தால்
எங்கென்னை அழைத்துச் செல்கின்றாய்
மைத்துனனின் துணையோடு?

பூக்களின் மணம்வீசும் பூஞ்சோலைக்கா?
குளிரோடையின் சுகம்பேசும் பனிமலைக்கா?
எனக் கேட்டேன் ஆவலுடன்.."

எனதருமைத் தம்பியே!
உனக்கெப்போது பொறுமை வருமோ?
சொல்கிறேன் கேள்!
எனதினிய துணைவனின் துணையோடு
உனையழைத்துச் செல்வேன் ஓர் அரிய இடத்திற்கு!!-அங்கே

பூக்களின் மணம்பேசாது!
குளிரோடைக் காற்றும் வீசாது!

கண்டயிடமெல்லாம் கரும்பாறைகளுண்டு!
செல்லும்வழியாவும் கடும்வெயிலுமுண்டு!
தாகம் தணிக்க நீரும் இராது!-வியர்த்த
தேகத் தினிலே உப்பும் இராது!

அவ்விடம் கண்டு, ரசித்து,
ஓர் கவிதை வரையடா என்று
அன்புக்கட்டளை யிட்டாள்!
இல்லை! சவால் விட்டாள்!

என்ன இது!
பல்லாயிரம்மைல்கள் கடந்து
என்ன நிலைமையில் இங்கு வந்துள்ளேன்
என்றுனக்குத் தெரியுமா?
கவிஞனென்று நானா கூறினேன்?
கூட்டத்தினுள்ளே எவரோ கூறினால்
நானென்ன செய்வேன்? - என்று
வடிவேலு பாணியில் அழுதாலும்
விடுவதாய்த் தெரியவில்லை!

உம்மிருவரையும் காணவந்த
எனக்கு இதுவா நீசெய்யும்
விருந்தோம்பல்? என சின்னதொருகோபம்
எழுந்தது எனதுள்ளத்தில்.
மௌனமாய், மலைப்பாய், உடன்சென்றேன்.

சாலைகள் கடந்து
சமவெளிப்பகுதியும் கடந்து
புள்வெளி மரங்கள் கடந்து
அவ்விடம் அடைந்தோம்!

பள்ளத்தாக்கு! - எனது
உள்ளந்தாக்கிய பள்ளத்தாக்கு!
திகைத்தேன்!
விரிந்தவிழிகள் இமைக்கும் தொழிலை மறந்தன.
பிரமித்தேன்!
புவியரசன் வாய்பிளந்து மிரட்டினான்.
நானோ வாய்பிளந்து மிரண்டிருந்தேன்!



பள்ளத்தாக்கின் ஆழம் சில ஆயிரமடிகள்!
விரிந்துகாணும் அகலம் பத்துமைல்கள்!
நீளமோ சில நூறு மைல்கள்!

இருவரும் பள்ளத்தாக்கின் கதைகூறினர்!

"பல்லாயிரம் ஆண்டுகள்கடந்து பின்சென்றால்
இன்றுள்ள பல்லத்தாக்குப் பகுதி
சமவெளியாயிருக்க அதன்மீது
தூரத்துப் பனிமலைகள் உருகி
காட்டாறொன்று பாய்ந்தோடியது!
கொலராடோ எனும் பெயர் கொண்டு!

சமவெளியில் பாய்ந்த அந்த நதி
தனது கரைபுரண்ட சீற்றத்தில்
கர்வம் கொண்டு
நிலமகள் பொறுமையின் அளவறிய
தனது அகழ்வுப்பணியைத் தொடங்கியது!




ஆண்டுகள் நகர நகர நிலத்தின்
ஆழம் அதிகரித்தது!
நதியின் அகலம் சுருங்கியது!
அகழ்வுப்பணியை முடுக்கியது!

புவியரசி தன்னுள் புதைந்துள்ள
பலமுகங்களை பலநிறங்களை
கம்பீரத்துடன் காட்டத்தொடங்கினாள்!

புன்னகையுடன் நதியிடம் சொன்னாள்,
நதியே! சீறிப்பாய்வதும்
நிலத்தை அகழ்வதும் உனதுகுணம்!
எந்தவொரு சீற்றத்தையும்
உள்வாங்கிக் கொண்டு
பொறுமைகாப்பது என்குணமென்று!

நாணத்தால் நதிதன் அகலம் சுருக்கி
ஆழத்தில் நிலத்தின்மடியில் தவழ்கிறது
தாயின் பொறுமையுணர்ந்த சேய்போல!"

இவ்வாறு கதைகூறிமுடித்தனர் இருவரும்.

எனது தலைகவிழ்ந்தது!

மொழிக்கு அணிசேர்த்தால்
கவிதையாகும், பாடலாகும், கட்டுரையுமாகும்!

புவிக்கு அணிசேர்த்தால் அது
பூஞ்சோலையாகும், பனிமலையாகும், மலைமுகிலாகும்!

இங்குநாம் காணும்காட்சி
இலக்கணமறியாக் குழந்தையின் மழலைமொழி!

மழலைப்பேச்சின் அழகிற்கு எந்த
அணியிலக்கணம் தடைகூறும்?

கட்டுக்கடங்காத இந்த எழிலை
கவிதையென்னும் எல்லைக்குள்ளா
கட்டிப் போடுவது?



இப்படியே விரிந்துகிடக்கட்டும்
இதன் இயல்பான கம்பீரத்துடன்!
எனக்கூறி நழுவினேன்.

"சமாளிப்புத் திலகமே!"
வந்தனம்!என பட்டம்கொடுத்து
வழியனுப்பிய இருவருக்கும்
என் மனமார்ந்த நன்றி!

- சரவணன்