Saturday, August 16, 2008

ஆயிரம் ஜன்னல் - சத்குருவின் புதிய ஆனந்த விகடன் தொடருக்கு அவரின் முன்னுரை

வாழ்க்கையை நீங்கள் காண்பதெல்லாம் அங்கங்கே திறந்திருக்கும் ஜன்னல் சதுரங்கள் வழியேதான்!

பாதி உண்மை என்பது உண்மையே அல்ல. அதே போல், அரைகுறை வாழ்க்கை என்பது முழுமையான வாழ்க்கை அல்ல. பெரும்பாலான சமயங்களில், நீங்கள் முழுமையாக இருப்பது இல்லை!

சமூகத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாமல், மற்றவர் செய்வதையே செய்துவந்திருக்கிறீர்கள். வாழ்வது என்பது வளர்ச்சியின்றி, ஓரிடத்தில் நிலைபெற்று நிற்பதல்ல. புதிய அனுபவங்களுக்குத் தயாராகாமல், பத்திரமாக இருக்க வேண்டும் என்று உங்களை நீங்களே சிறைக்குள் பூட்டிக்கொண்டுவிட்டீர்கள். அதனால், வாழ்க்கையின் முழுமையான வீச்சை நீங்கள் உணர்வது இல்லை.
என்னைச் சுற்றி அந்தச் சுவர்களை எழுப்பிக்கொள்ளாததால்தான் என் வாழ்க்கை வித்தியாசமாக அமைந்தது. அற்புதமாக மலர்ந்தது. மற்றவர்களால் என் கேள்விகளுக்குத் திருப்தியான விடை அளிக்க முடியாதபோது, அந்த விடைகளை அனுபவப்பூர்வமாகப் பெற்றுவிட நானே தேடிச் சென்றேன். வாழ்க்கையில் என்னைச் சுற்றி நிகழ்ந்த ஒவ்வொன்றும் எனக்கு ஏதோ ஒரு அர்த்தத்தைக் காட்டிவிட்டுத்தான் போயிருக்கிறது.

என்னை வித்தியாசமானவனாகக் காட்டிக்கொள்வதற்காக வலுக்கட்டாயமாக நான் எதையும் செய்யவில்லை. எதையெல்லாம் என் வாழ்க்கையில் அர்த்தமுள்ளதாக உணர்ந்தேனோ, அதையெல்லாம்தான் செய்தேன்.

சில விஷயங்களைப் பெறுவதற்கு வேறு சில விஷயங்களை விலையாகக் கொடுத்துதான் ஆக வேண்டும். கொடுக்கத் தயாராக இருந்தேன், கொடுத்தேன். கொடுத்ததைவிட கோடி அளவு அதிகமாகப் பெற்றேன்.

''உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்வீர்களா?''

''டும் நதியிலிருந்து ஒரு கை அள்ளி, நான் உங்களுக்குக் கொடுக்க முடியும். அவ்வளவுதான். அதனால் உங்கள் தாகம் தீர்ந்துவிடப் போவதில்லை. தாகம் தணிய வேண்டுமானால், நீங்களேதான் குனிந்து நதியிலிருந்து அள்ளிக் குடிக்க வேண்டும். நீங்களே அருந்துகிறபோதுதான், எனக்கு நேர்ந்ததெல்லாம் உங்களுக்கும் நிகழும்.

உங்களை வாழ்க்கை முழுவதும் பாதுகாப்பு உணர்வே பிரதானமாக இயக்கியிருக்கிறது. அந்தத் தந்திரங்களை விட்டு விலகினால்தான், வாழ்க்கையின் முழுமையான உண்மையான அர்த்தத்தை நீங்கள் உணர முடியும்.

உங்களுக்காக சில ஜன்னல்களைத் திறந்து காட்டுகிறேன். ஆனால், சுவர்களை உடைத்துக்கொண்டு நீங்கள் வெளியேறும் நாள்தான் உங்களுக்கு முழு விடுதலை!'